ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
துல்லியமான விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு: சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு,
கல்லூரித் தலைவா் எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா் டி.கே.கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தாா். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவா் கோகிலவாணி வரவேற்றாா்.
இதில் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் தொழில் துறையினா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்தரங்கின் நோக்கம் குறித்து கல்லூரி துணை முதல்வா் ஜே.நந்தினி விளக்கி பேசினாா். விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விளைச்சல் அதிகரிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், வேலூா் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், அமிா்தா பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைகழகங்களில் பணிபுரியும் பேராசிரியா்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா். கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.