ஜோனதனுக்கு தங்கம்; ராஷ்மிகாவுக்கு வெள்ளி
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை இரு பிரிவுகளில் பதக்கம் கிடைத்தது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில், ஜோனதன் காவின் ஆன்டனி 244.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இத்தாலியின் லுகா ஆரிகி வெள்ளியும் (236.3), ஸ்பெயினின் லூகாஸ் சான்செஸ் வெண்கலமும் (215.1) பெற்றனர்.
இறுதிச்சுற்று களத்திலிருந்த மற்றொரு இந்தியரான சிராக் சர்மா, 115.6 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பிடித்தார். இதர இந்தியர்களில், கபில், தைரிய பிரசார், விஜய் தோமர் ஆகியோர் தகுதிச்சுற்றுடன் வெளியேறினர்.
அதிலேயே மகளிர் தனிநபர் பிரிவில், ராஷ்மிகா சாகல் 236 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றார். பொதுப் போட்டியாளராகப் பங்கேற்ற ரஷியாவின் எவ்லினா ஷெய்னா தங்கமும் (240), ஈரானின் ஃபடேமி ஷெகாரி வெண்கலமும் (213) வென்றனர். இறுதிச்சுற்றிலேயே இதர இந்தியர்களில், வன்ஷிகா செளதரி 5-ஆம் இடமும் (174), மோஹினி சிங் 6-ஆம் இடமும் (153) பிடித்தனர். லக்ஷிதா, ஊர்வா செளதரி ஆகிய இந்தியர்கள் தகுதிச்சுற்றுடன் வெளியேறினர்.
முதலிடம்: பதக்கப் பட்டியலில் தற்போது இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.