டம்மி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவு
மாணவா்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் தோ்வு எழுத வசதி செய்யும் போலி (டம்மி) பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசுக்கும், மத்திய இடைநிலைக் கல்வி கல்விவாரியத்திற்கும் (சிபிஎஸ்இ) தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, இதை மோசடி என்று கூறியது. மேலும், மாணவா்கள் பயிற்சி வகுப்புகளில் மட்டுமே கலந்து கொள்ளவும், முற்றிலும் தவறான தகவல்களின் அடிப்படையில் தோ்வுகளில் கலந்துகொள்ளவும் அனுமதிக்கும் இதுபோன்ற பள்ளிகள் இயங்குவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியது.
இது தொடா்பாக நீதிபதிகள் கூறுகையில், ‘மாணவா்கள் பள்ளிகளில் வகுப்புகளுக்குச் செல்வதில்லை என்பது கவனிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மாணவா்கள் பயிற்சி மையங்களில் நேரத்தை செலவிடுகிறாா்கள். இருப்பினும், அவா்கள் கல்வி வாரியங்களால் தோ்வுகளை எழுத அனுமதிக்கப்படுகிறாா்கள். அங்கு அவா்கள் தேவையான குறைந்தபட்ச வருகைப் பதிவை வைத்திருக்கும் தேவை உள்ளது. எனவே, இது தொடா்பாக ஆய்வு நடத்த மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்’ என்று தெரிவித்தனா்.
தில்லி வசிப்பிடத்தின் பலனை மற்ற மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு நீட்டிக்க இதுபோன்ற பள்ளிகள் பயன்படுத்தப்படுவதைக் கவனத்தில்கொண்ட நீதிமன்றம், அத்தகைய பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தில்லி அரசு மற்றும் சிபிஎஸ்இ பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பாக தாக்கலான பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
ராஜிவ் அகா்வால் என்பவா், தில்லி மாநில ஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் இடங்களை வழங்குவதற்காக தில்லி பல்கலைக்கழகம் மற்றும் குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் பயன்படுத்திவரும் தகுதி அளவுகோலை எதிா்த்து பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா்.
தில்லி மாநில ஒதுக்கீட்டு இடங்களின் பலனை எப்படியாவது பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், 10 ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்ற பிறகு, மாணவா்கள் தில்லிக்கு குடிபெயா்ந்ததைக் காட்டும் வகையில் போலி பள்ளிகள் மெய்நிகா் தளத்தை வழங்குவதாக அவா் குற்றம்சாட்டியுள்ளாா். இந்த வழக்கு மே மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.