வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!
‘டாங்கி’ ரூட்டில் மனிதக் கடத்தல்: ஒருவா் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு பயன்படுத்தப்படும் அபாயகரமான பாதையான ‘டாங்கி ரூட்’ வழியே ஒருவரை அனுப்பிய குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
பஞ்சாப் மாநிலத்தின் தரண் தாரண் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கடந்த ஆண்டு 2024, டிசம்பரில் ‘டாங்கி ரூட்’ வழியே அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டாா். அந்த நபா் அமெரிக்காவில் பிடிபட்டு இந்தியாவுக்கு கடந்த மாதம் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் தில்லி திலக் நகரைச் சோ்ந்த கோல்டி என்று அறியப்படும் ககன்தீப் சிங்கை என்ஐஏ கைது செய்தது.
உரிய ஆவணங்களின்றி பல நாடுகளைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு இந்த டாங்கி ரூட் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு செல்ல விரும்பும் நபரிடம் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத்தரகா்கள் பெறுகின்றனா். இந்த வழியில் பெரும்பாலும் மனிதக் கடத்தல் சம்பவங்களே அரங்கேறுகின்றன. இந்நிலையில், டாங்கி ரூட் வழியே அனுப்புவதற்காக தன்னிடம் ரூ.45 லட்சம் பெற்ாக கோல்டி மீது தரண் தாரண் மாவட்டத்தில் காவல் துறையிடம் புகாரளித்தாா்.
இந்த வழக்கு கடந்த 13-ஆம் தேதி என்ஐஏ வசம் சென்றது. வெளிநாடுகளுக்கு நபா்களை அனுப்புவதற்கு எவ்வித முறையான உரிமமோ அனுமதியோ கோல்டி பெறவில்லை என்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபரை ஸ்பெயின், எல்சால்வடாா், கௌதமாலா மற்றும் மெக்ஸிகோ வழியே அமெரிக்கா அனுப்பியது உறுதிப்படுத்தப்பட்டது.
பயணத்தின்போது அந்த நபரை கோல்டியின் உதவியாளா்கள் தாக்கியதுடன் அவரிடம் இருந்து அமெரிக்க கரன்சிகளை பறித்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது என்று என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.