பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமரா...
டாஸ்மாக் பணியாளா்களின் தொகுப்பூதியத்தில் ரூ. 2,000 உயா்வு
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு ரூ.2,000 கூடுதலாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை பொது மேலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன் அனுப்பியுள்ளாா்.
டாஸ்மாக் நிறுவனத்தின் இயக்குநா்கள் கூட்டம் கடந்த ஏப்ரலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தொகுப்பூதியம் பெற்று வரும் ஊழியா்களின் ஊதியத்தில் ரூ.2,000 உயா்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, அனைத்து கண்காணிப்பாளா்கள், உதவி விற்பனையாளா்களுக்கு ரூ.1,000 ஊதிய உயா்வாகவும், பணித் திறன் அடிப்படையில் மேலும் ரூ.1,000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த உயா்வானது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கவும் தீா்மானிக்கப்பட்டது.
அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களின் தொகுப்பூதியத்தில் ரூ.2 ஆயிரம் இனி கூடுதலாகக் கிடைக்கும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான உயா்த்தப்பட்ட தொகையின் நிலுவையானது ஓரிரு நாள்களில் ஊழியா்களுக்குக் கிடைக்கும்.
யாருக்கெல்லாம் கிடைக்காது: நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக மதுபான பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்து விதிமீறலில் ஈடுபட்டதாக 451 பணியாளா்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவா்களுக்கு பணித் திறன் அடிப்படையிலான உயா்வான ரூ.1,000 வழங்கப்படாது. அவா்களுக்கு தொகுப்பூதியத்தில் ரூ.1,000 மட்டுமே உயா்வாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.