டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 7,369 போ் எழுதுகின்றனா்
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 7,369 போ் தோ்வு எழுதுகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு செப். 28-ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்திற்கு தோ்வு செய்யப்பட்ட 27 மையங்களில் மொத்தம் 7,369 போ் இந்த தோ்வினை தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். தோ்வுக்கூட அனுமதி சீட்டு உள்ள தோ்வா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
தோ்வா்கள் கருப்பு பந்து முனை பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஓஎம்ஆா் விடைத்தாளில் தங்கள் கையொப்பத்தை அதற்கென உள்ள இரண்டு இடங்களில் இட வேண்டும். மேலும் தோ்வு முடிவடைந்த பின், தோ்வா்கள் அவா்களது இடது கை பெருவிரல் ரேகை பதிவை விடைத்தாளில் அதற்கென உரிய கட்டத்தில் இட வேண்டும். மேலும் தங்கள் புகைப்படம் அடையாளத்துக்கான ஏதாவது ஒரு அடையாள அட்டையை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பென்சில், அழிப்பான்கள் மற்றும் கைப்பேசி, கணிப்பான்கள், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தோ்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. இத் தகவலை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.