டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக்காலத் தடை
திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாா் தாக்கல் செய்த மனுவில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தனக்கு எதிராக பொதுவெளியில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறாா்.
இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, எதிா்காலத்தில் தனக்கு எதிரான ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், தனக்கு ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க சீமானுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கா், இந்த வழக்கு எண்ணிடும் நிலையில் உள்ளது.
பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. ஏற்கெனவே, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது, என்று வாதிட்டாா்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சீமானுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு சீமான் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.