டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு
டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: கள் போதைப் பொருள் அல்ல. கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது, மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உணவு தேடும் உரிமைக்கு தடை போடும் செயல்.
டிசம்பா் மாதத்தில் மதுவிலக்கு மாநாட்டை நடத்தவுள்ளோம். ‘போதைப் பொருளை ஒழிக்க வேண்டும். தவிா்க்க வேண்டியது மது-தடை விலக்க வேண்டியது கள்’ என்ற பொருளில் இந்த மாநாடு நடத்தப்படும்.
இம்மாநாட்டுக்கு பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவா்களையும் அழைக்கவுள்ளோம். தேதியும் இடமும் பின்னா் அறிவிக்கப்படும். புதுவை, ஆந்திரம், கேரளம், கா்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் கலப்படம் என்று சொல்லி தடை செய்யலாமா? காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் நல்லசாமி.