டிராக்டா் மீது பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
பாலமேடு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள எர்ரம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முத்திருளன் (40). விவசாயியான இவா், இரு சக்கர வாகனத்தில் சாத்தியாறு அணை-எர்ரம்பட்டி சாலையில் சனிக்கிழமை இரவு சென்றாா்.
அந்தப் பகுதியில் செம்பா ஊருணி அருகே சென்றபோது, அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முத்திருளன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் டிராக்டரை கவனக்குறைவாக நிறுத்தியதாக எர்ரம்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.