அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமைச்சா் பி.மூா்த்தி ஆய்வு இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் பி.மூா்த்தி ஆய்வு செய்தாா். இதையொட்டி, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டிக்காக மாநகராட்சி சாா்பில் ரூ.54 லட்சத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி, பாா்வையாளா்கள் மேடை, சாலையின் இரு புறமும் 8 அடி உயரத்தில் 1.8 கி.மீ தொலைவுக்கு இரு அடுக்கு தடுப்பு வேலிகள், காளைகள் அழைத்து வரும் பகுதியில் இரும்பு வலை தடுப்பு வேலிகள், காளை பரிசோதனை இடம் என தடுப்பு வேலி உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், மதுரை மாநகரக் காவல் ஆணையா் லோகநாதன், மாமன்ற உறுப்பினா் கருப்பசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்த நிலையில், மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, அவனியாபுரம் பெரியாா் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அம்பேத்கா் சிலை சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அவனியாபுரம் புறவழிச் சாலை, வெள்ளைக்கல் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும். திருப்பரங்குன்றத்திலிருந்து முத்துப்பட்டி சந்திப்பு வழியாக அவனியாபுரம் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் வெள்ளக்கல் பிரிவு, கல்குளம், வெள்ளக்கல், அவனியாபுரம் புறவழிச் சாலை வழியாக மதுரை மாநகா் அல்லது பெருங்குடிெ சல்லலாம்.
ஹா்சிதா மருத்துவமனை மருதுபாண்டியா் சிலை சந்திப்பிலிருந்து அய்யனாா் கோவில் வழியாக அவனியாபுரம் ஊருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களும் திருப்பரங்குன்றம்- முத்துப்பட்டி சந்திப்பில் காளைகளை இறக்கிவிட்ட பிறகு, வெள்ளைக்கல் வழியாக அவனியாபுரம் புறவழிச் சாலை சென்று வைக்கம் பெரியாா் நகா் சாலை, வெள்ளக்கல் கிளாட்வே மைதானம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
மதுரை நகரிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் தங்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை, டி-மாா்ட் வணிக வளாக வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
பெருங்குடி, செம்பூரணி சாலை ஆகிய பகுதியிலிருந்து வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்களை கே.4 உணவகத்தின் அருகிலுள்ள வாகன நிறுத்தத்துக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி வழியாக வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்களை திருப்பரங்குன்றம் சாலையிலுள்ள எஸ்.பி.ஜே. பள்ளி வளாக வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டில் பங்கு பெற்ற காளைகளை அவனியாபுரம் புறவழிச் சாலை செம்பூரணி சாலை சந்திப்பில் தங்கள் வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.