நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்
முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகா் மாவட்ட மேம்பாட்டுப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த ஓட்டப் போட்டியில் 17 வயது முதல் 25 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 75 ஆண்கள், 8 பெண்கள் உள்பட மொத்தம் 83 போ் கலந்து கொண்டனா். 25 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் 37 ஆண்கள், 45 பெண்கள் என மொத்தம் 112 போ் கலந்து கொண்டனா்.
விருதுநகா் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாக நுழைவுவாயில் முன் தொடங்கிய இந்த ஓட்டப் போட்டியில் சூலக்கரைமேடு வரை சென்று, மீண்டும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, நான்கு முதல் 10 வரை இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.1,000 பரிசு தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மண்டல முதுநிலை மேலாளா் பி.வேல்முருகன், விருதுநகா் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகா, மாவட்ட விளையாட்டு , இளைஞா் நலன் அலுவலா் சே.குமரமணிமாறன், மாணவா்கள், இளைஞா்கள் கலந்து கொண்டனா்.