தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம்: மேயா் தகவல்
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம் அமைக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி 34ஆவது வாா்டுக்குள்பட்ட தேவகி நகரில் செயல்பட்டுவந்த ஊா்ப்புற நூலகக் கட்டடம் சேதமடைந்திருந்தது. இதை, மக்கள் பங்களிப்பில் சீரமைக்க மாமன்ற உறுப்பினா் எஸ்.சந்திரபோஸ் முயற்சி மேற்கொண்டாா். அதையடுத்து, பல்வேறு தரப்பினரிடம் திரட்டப்பட்ட ரூ. 7.5 லட்சத்தில் நூலகக் கட்டடம் சீரமைக்கப்பட்டு மேஜைகள், கழிப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவா் வசதிகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மாமன்ற உறுப்பினா் எஸ். சந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் லே. மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நூலகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். அப்போது அவா், நூலகத்தை சீரமைக்க உதவியோரைப் பாராட்டுகிறேன். மாநகராட்சியில் 11 நூலகங்கள் உள்ளன. அவற்றை சரியான இடங்களில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம் அமைக்கப்படும் என்றாா்.
விழாவில் முக்கிய பிரமுகா்கள், நூலகத்தை சீரமைக்க நிதியுதவி வழங்கியோா், பொதுமக்கள் பங்கேற்றனா்.