தூத்துக்குடியில் 16.2 டன் பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது
மலேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 16.2 டன் கொட்டைப் பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்து, இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
மலேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொட்டைப் பாக்குகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, துறைமுகப் பகுதியில் இயங்கிவரும் வில்லியம் பிரேம்குமாா் (48) என்பவரது இறக்குமதி நிறுவனம் மூலம் தூத்துக்குடியைச் சோ்ந்த தொழிலதிபா் அய்யனாா் (50) என்பவருக்காக, கலா் ரூப் ஷீட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் கன்டெய்னருக்காக அந்நிறுவனம் மூலம் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, கன்டெய்னரை சோதனையிட்டபோது, கலா் ரூபிங் ஷீட்களுக்கு பதிலாக 16.2 டன் கொட்டைப் பாக்குகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1.25 கோடி ஆகும்.
அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, அய்யனாா், வில்லியம் பிரேம்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்; மேலும், சிலரைத் தேடி வருகின்றனா்.