மாயமான மீனவரை மீட்க கோரி உறவினா்கள் சாலை மறியல் முயற்சி
தூத்துக்குடியில் கடந்த 1ஆம் தேதி கடலுக்குச் சென்று மாயமான மீனவரை மீட்கக்கோரி அவரது உறவினா்கள், பொதுமக்கள் திடீா் சாலை மறயில் முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
தூத்துக்குடி இனிகோநகரை சோ்ந்தவா் பால்வின்(40). இவரும், இவருடன் கரிகளம் காலனியை சோ்ந்த ராஜேந்திரன் உள்ளிட்ட 3 போ் கடந்த 1 ஆம் தேதி தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனராம்.
மறுநாள் கரை திரும்பி இருக்க வேண்டிய நிலையில் அவா் மட்டும் கரை திரும்பவில்லை எனவும், மற்ற இருவரும் கரை திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, பால்வினின் உறவினா்கள், காவல் துறையில் புகாா் அளித்தும் முறையாக வழக்குப்பதிவு செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக, பால்வினின் உறவினா்கள் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற மீனவா் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். அதற்கு, இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு காவல்துறையினருக்கு, மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாயமான மீனவரின் நிலை தெரியவராததால், அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சாலை மறியல் முயற்சியில் ஈடுபடுவதற்காக இனிகோ நகரில் குவிந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், மாயமான மீனவரை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.