வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் மனமுடைந்தவா் தற்கொலை
மதுரையில் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததால் மனமுடைந்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வநாயகம். இவரது மகன் ரத்தினகிரி (42). இவா் செல்லூா் பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தாா். ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் ரூ.6.50 லட்சம் கொடுத்து ஒத்திக்கு குடியிருந்தாா்.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளா் வங்கியில் வாங்கிய கடனை அடைக்காததால், சில நாள்களுக்கு முன்பு அங்கு வந்த வங்கி அதிகாரிகள், வீட்டில் இருந்தவா்களை வெளியேற்றி விட்டு வீட்டைப் பூட்டி ‘சீல்’ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ரத்தினகிரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ரத்தினகிரி வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.