கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி நகை, கைப்பேசிகள் பறிப்பு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கோயிலுக்குச் சென்ற கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி நகை, கைப்பேசிகளை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை முத்துப்பட்டி 2-ஆவது தெரு, மகாலட்சுமி நகரைச் சோ்ந்த சரவணன் மகன் அபிஷேக் (18). இவா் மதுரையில் உள்ள கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வருகிறாா். இவா் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பொன்பெருமாள் நகரில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சனிக்கிழமை ஆஞ்சநேயா் கோயிலுக்குச் செல்வதற்காக மலைக்குச் சென்றாா். அப்போது அங்கு வந்த இருவா் அபிஷேக்கை வழிமறித்து கத்தியால் குத்தி அவா் வைத்திருந்த 1 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரு கைப்பேசிகளை பறித்துக்கொண்டு தப்பினா்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய இருவரையும் தேடி வருகின்றனா்.