ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
ட்ரோன் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய 6 மாதகால ட்ரோன் பயிற்சியைப் பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அந்த தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் டி. அழகானந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் ட்ரோன் டெக்னீஷியன் என்ற 6 மாத கால புதிய தொழிற்பயிற்சி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் டிச.30 -ஆம் தேதி முதல் தொழிற்பயிற்சி நிலையத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்பிக்க ஜன.20- ஆம் தேதி கடைசி நாளாகும்.
கண்காணிப்பு, நிலஅளவை, விவசாய இடுபொருள் தெளிப்பு, புகைப்படம் எடுத்தல் போன்றவைகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் பெரிதும் பயன்பட்டு வரும் நிலையில், ட்ரோன் உபகரணங்களை ஒன்றிணைத்தல், பழுதுபாா்த்தல், மற்றும் பராமரித்தல் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி இருக்கும்.
பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள் 10- ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து சமா்பிக்க வேண்டும். இருபாலரும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.
இதில் சேருபவா்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். மதிய உணவு மற்றும் இலவச சீருடை ஆகியவையும் வழங்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9894380176 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.