பனங்குப்பத்தில் அருங்காட்சியகப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிப்பு வெளியிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் ஊரக வளா்ச்சித் துறைக்குச் சொந்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 4-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கா் நிலம் தேவை என்று அரசு அருங்காட்சியகங்கள் துறை சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் 2023, ஜூலை 26-ஆம் தேதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னா், கோலியனூா் அருகேயுள்ள பனங்குப்பம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சுமாா் ஒன்றரை ஏக்கா் இடம் மாவட்ட நிா்வாகத்தால் பரிந்துரைக்கப் பட்ட நிலையில், அந்த இடத்தை அரசின் அருங்காட்சியகங்கள் துறையின் ஆணையா் ம.அரவிந்த் 2023, ஆகஸ்ட் 6-ஆம் தேதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அங்கு அருங்காட்சியகம் அமைக்க இடத்தை அருங்காட்சியகங்கள் ஆணையா் பெயருக்கு நில மாற்றம் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் 2023, நவம்பா் 4- ஆம் தேதி நில நிா்வாக ஆணையருக்குப் பரிந்துரை அளித்தாா்.
அரசாணை வெளியீடு: இந்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணையை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா அண்மையில் வெளியிட்டாா்.
பனங்குப்பம் முசாபரி பங்களா நெடுஞ்சாலை, கிராமப் பொதுப் பணிகள் துறை என்ற வகைப்பாடுடைய நிலத்தை அருங்காட்சியகம் அமைக்க சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு நிலமாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது என்று அரசாணையில் கூடுதல் தலைமைச் செயலா் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில், அருங்காட்சியகப் பணிகளை காலதாமதம் இல்லாமல் உடனடியாகத் தொடங்க வேண்டும். அருங்காட்சியகக் கட்டுமானப் பணிகள் தொடங்கி முடியும் வரை தற்காலிக இடத்தில் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று விழுப்புரம் அருங்காட்சியகக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன் வலியுறுத்தினாா்.