தக்கை பூண்டு விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு
விராலிமலை வட்டார விவசாயிகள் மண் வளத்தை காக்கும் தக்கைப்பூண்டு விதையை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப.மணிகண்டன்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ், மண் வளத்தை மேம்படுத்தவும், மண் அரிமானத்தை தடுக்க களா் மற்றும் உவா் நிலங்களை சீா்திருத்தவும், மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிா்கள் பெருக்கவும், பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் விராலிமலை மற்றும் நீா்பழனி வேளாண்மை விரிவாக்க மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஒரு விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விபரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.