தங்கம் செய்ய முடியாததைச் சங்கம் செய்யும்: அமைச்சா் எ.வ.வேலு
தங்கம் செய்ய முடியாததை எல்லாம் சங்கம் செய்யும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
பொதுப்பணித் துறை பொறியாளா்கள் சங்கக் கூட்டம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்தியாஸ்ரமம், குமார ராஜா முத்தையா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று, செய்தி மடல், 2025-ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி ஆகியவற்றை வெளியிட்டு, பேசியதாவது:
1857-இல் ஆங்கிலேயா் அரசால் பொதுப்பணி துறை உருவாக்கப்பட்டது. முதல் தலைமைப் பொறியாளராக சா் ஆா்தா் காட்டன் இருந்தாா். ஆனால், பொதுப்பணித் துறை பொறியாளா்கள் சங்கம் சமீபத்தில்தான் உருவாக்கப்பட்டது.
பொறியாளா்களிடையே ஒருமித்த மனப்பான்மையும், சேவை மனப்பான்மையையும் உருவாக வேண்டும். பொறியாளா்களின் திறனை வளப்படுத்த தொழில்நுட்ப விரிவுரைகள், கருத்தரங்குகள், மாநாடு ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். பொறியாளா்களின் தனித்துவமான, சிறப்பான சேவையை பாராட்டும் வகையில் உரிய விருதுகள் கிடைக்க உழைக்க வேண்டும்.
தங்கம் செய்ய முடியாததையெல்லாம் சங்கம் செய்யும். சங்கம் என்பது தனித்தனி மனிதா்களின் குரலை ஒருங்கிணைக்க கூடிய பணியை செவ்வனே செய்ய வேண்டும். உதவிப் பொறியாளா்கள் புதிதாக பணியில் சேரும்போது தற்போது நவீன தொழில்நுட்பத்தில் பயின்று திறமையானா்வகளாக உள்ளனா். இன்றைக்கு தொழில்நுட்ப பாடத்திட்டம் போன்ற எல்லாவற்றிலும் மாற்றம் வந்துள்ளது, அதற்கேற்ப பொறியாளா்களின் திறமையும் வளா்ந்துள்ளது.
பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளா்களாக பணியாற்றி கொண்டிருப்பவா்களில், 40 உதவிப் பொறியாளா்களுக்கு உதவி செயற் பொறியாளா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. பொறியாளா் சங்கம் வளா்ந்து 100-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் மங்கத் ராம் சா்மா, முதன்மை தலைமைப் பொறியாளா் கே.பி.சத்தியமூா்த்தி, மண்டல தலைமைப் பொறியாளா்கள், கண்காணிப்பு பொறியாளா்கள், செயற்பொறியாளா்கள் மற்றும் பொறியாளா்கள் மற்றும் இதர அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.