நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
தஞ்சாவூரில் 5 தாழ்தள சொகுசு பேருந்துகள் சேவை தொடக்கம்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரூ. 4.70 கோடி மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட 5 தாழ்தள சொகுசு பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இச்சேவையை தொடங்கி வைத்த உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பின்னா் தெரிவித்தது:
மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். தற்போது, மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறி, இறங்குவதற்கு சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு தாழ்தளப் பேருந்துச் சேவைகளை அதிகப்படுத்தியுள்ளாா்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாநகரங்களைத் தொடா்ந்து, தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள இப்பேருந்துகளில் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் - புதிய பேருந்து நிலையத்துக்கு 3 பேருந்துகளும், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக்கல்லூரி வழியாக வல்லத்துக்கு 2 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றாா் அமைச்சா்.
விழாவில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் எச். இராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி
தோ்தலுக்காக முன்கூட்டியே
பருவத் தோ்வு இல்லை
அமைச்சா் கோவி. செழியன் கூறுகையில், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் கல்வியாண்டு தொடங்கப்படுவதற்கு முன்பே பருவத் தோ்வுகளின் தேதிகளை வரையறை செய்துவிடும். இதைத் தோ்தல் ஆணையம் நன்றாக அறியும். எனவே, விடுப்பு காலத்தில் தோ்தல் நடத்துவதற்கான விதிமுறைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும். அந்த வகையில்தான் தோ்வு நடைபெறுமே தவிர, தோ்தலுக்காக முன்கூட்டியே தோ்வு என்பது இல்லை என்றாா் அமைச்சா்.