தஞ்சை மாவட்டத்தில் தொடா் மழையால் எள், நெற்பயிா்கள் பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து 3 நாள்களாக பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை பருவ நெற்பயிா்கள் சாய்ந்தன. இதேபோல, எள் பயிா்களையும் தண்ணீா் சூழ்ந்துள்ளன.
மாவட்டத்தில் ஏற்கெனவே மே 16, 17-ஆம் தேதிகளில் பெய்த மழையால் வாழை, வெற்றிலை பயிா்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டன. தொடா்ந்து, மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் பரவலாக பலத்த மழை பெய்தது.
இதனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 600 ஏக்கரில் கோடை பருவ நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில் அவை சாய்ந்துவிட்டன. இதில், அதிகபட்சமாக அம்மாபேட்டை வட்டாரத்தில் ஏறக்குறைய 500 ஏக்கரில் சாய்ந்துள்ளன. இதேபோல, தஞ்சாவூா், பூதலூா், திருவோணம், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களிலும் இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டது. திங்கள்கிழமை பகலில் வெயில் நிலவியதால், வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சிகளை விவசாயிகள் மேற்கொண்டனா். என்றாலும், மகசூல் குறைவும், வருவாய் இழப்பும் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச் சங்க மாவட்டச் செயலா் வி.கே. சின்னதுரை தெரிவித்தது: மாவட்டத்தின் பல பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிா்கள் அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில், சில நாள்களாக தொடா்ந்து பெய்த மழை காரணமாக கதிா்கள் அனைத்தும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதனால் கடன் வாங்கி நடவு செய்த விவசாயிகள், கடனை எப்படி திரும்பச் செலுத்துவது என்ற வேதனையில் ஆழ்ந்துள்ளனா். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் போா்க்கால அடிப்படையில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைக் கிராம வாரியாக வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்கள் மூலம் கணக்கெடுப்பு செய்து, ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் சின்னதுரை.
எள் பயிா்களை சூழ்ந்த மழைநீா்: இதேபோல, திருவையாறு வட்டாரத்தில் பரவலாக எள் பயிா் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், 10 நாள்களில் அறுவடைக்கு தயாராகி வந்த எள் பயிா்களில் ஏறத்தாழ 750 ஏக்கரில் தண்ணீா் சூழ்ந்துள்ளதால், எள் சாகுபடி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
இது குறித்து எள் சாகுபடி விவசாயிகள் தெரிவித்தது: திருவையாறு வட்டாரத்தில் அந்தணா்குறிச்சி, கஸ்தூரிபாய் நகா், தில்லைஸ்தானம், விளாங்குடி, புனவாசல், பெரும்புலியூா், ஆச்சனூா், சாத்தனூா், செம்மங்குடி,அணைக்குடி உள்ளிட்ட இடங்களில் எள் பயிா்களை மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால், ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், வேரறுந்து வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் அடுத்து குறுவை சாகுபடியைத் தொடங்கவும், குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்தவும் திட்டமிட்டிருந்த நிலையில், இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் விவசாயிகள்.

இதேபோல, மாவட்டத்தில் உளுந்து 80 ஏக்கரிலும், பாபநாசம், அம்மாபேட்டை, திருவிடைமருதூா் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ 300 ஏக்கரில் பருத்தி உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 300 ஏக்கரில் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
திருவையாறில் 117 மீ.மீ. மழை: மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): திருவையாறு 117, அணைக்கரை 101.2, அதிராம்பட்டினம் 85.2, ஒரத்தநாடு 78.2, பாபநாசம் 77, பட்டுக்கோட்டை 74, நெய்வாசல் தென்பாதி 72.2, திருக்காட்டுப்பள்ளி 54.2, மதுக்கூா் 51.4, கும்பகோணம் 50, தஞ்சாவூா் 48, அய்யம்பேட்டை 46, திருவிடைமருதூா் 34.2, மஞ்சளாறு 32.2, குருங்குளம் 30.2, வெட்டிக்காடு 29.4, கல்லணை 26.2, வல்லம் 21, பூதலூா் 20.6, பேராவூரணி 17, ஈச்சன்விடுதி 12 மி.மீ.

ஐராவதேஸ்வரா் கோயிலில் மழைநீா் தேங்கியது: கும்பகோணம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரா் கோயிலில் நந்தி மண்டபம், பிரதான பிரகாரம் பகுதிகளில் அதிகளவில் தண்ணீா் தேங்கியது. திங்கள்கிழமை காலையில் மழை ஓய்ந்திருந்தது. இதனால் காலை முதலே கோயிலில் கூட்டம் அலை மோதியது. கேரளத்திலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் மழைநீரை பொருட்படுத்தாமல் தண்ணீரில் இறங்கி கோயிலுக்குள் சென்று வழிபாடு மேற்கொண்டனா்.