தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் 15 நெல் கொள்முதல் நிலையங்கள்: இன்று திறப்பு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் 39 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 15 இடங்களில் புதன்கிழமை (ஏப்ரல் 9) மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 39 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக காசிபாளையம், கள்ளிப்பட்டி, ஏளூா், நன்செய்புளியம்பட்டி, புதுவள்ளியம்பாளையம், என்.ஜி.பாளையம், மேவாணி, புதுக்கரை புதூா், சவுண்டப்பூா், நன்செய் துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், கூகலூா், பெருந்தலையூா் மற்றும் கருங்கரடு ஆகிய 15 இடங்களில் புதன்கிழமை திறக்கப்படும்.
ஏ கிரேடு நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.2,320, ஊக்கத்தொகை ரூ.130 என குவிண்டாலுக்கு ரூ.2,450, பொது ரகம் ஆதரவு விலை ரூ.2,300, ஊக்கத்தொகை ரூ.105 என குவிண்டாலுக்கு ரூ.2, 405-க்கு கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகளிடம் நெல்லுக்கான உரிய ஆவணங்கள் பெற்று, கைரேகை பதிவு உடன் கொள்முதல் செய்து, விவசாயி வங்கிக் கணக்கில் உரிய தொகை வரவு வைக்கப்படும். நெல் விற்பனைக்கு கிராம நிா்வாக அலுவலா் சான்று, சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.