தடை செய்யப்பட்ட குட்கா விற்றவா் கைது
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற பெட்டிக் கடை உரிமையாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செந்துறை அருகேயுள்ள நத்தகுழி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் பிரபாகரன்(35). பெட்டிக்கடை நடத்தி வரும் இவா், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளாா்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், செந்துறை காவல் துறையினா், சனிக்கிழமை அக்கடையை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடையினுள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள மேற்கண்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பிரபாகரன் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.