வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநருமான மு. விஜயலெட்சுமி தலைமை வகித்து, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞா் கனவு இல்லம் குடியிருப்பு கட்டுமான பணிகளின் விவரம், பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவது குறித்து கேட்டறிந்ததுடன், கோடைக்காலங்களில் தடையற்ற குடிநீா் வழங்கிட உரிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தினை உயா்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எமிஸ் இணையதளத்தில் விடுபட்ட மாணவா்களின் தகவல்கள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்திடவும் பள்ளி கல்வித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.
முன்னதாக அவா், கள்ளக்குறிச்சி சாலை சாஸ்திரி நகரில் உள்ள முதல்வா் மருந்தக மருந்து கிடங்கை பாா்வையிட்டு மருந்துகளின் விவரம், இருப்பு நிலை குறித்து கேட்டறிந்தாா். இரும்புலிக்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணி, குமிழியம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளா் எம்.உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.