Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
தனியாா் நிறுவன அதிகாரியிடம் வெளிநாட்டு பெண் போல பேசி ரூ. 6.50 லட்சம் மோசடி!
புதுச்சேரி தனியாா் நிறுவன அதிகாரியிடம் இணையவழியில் கனடா நாட்டுப் பெண் போல பழகியவா் ரூ.6.50 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்து கின்றனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 46 வயதானவா், தனியாா் நிறுவன மேலாளராக உள்ளாா். மனைவியைப் பிரிந்த அவா் முகநூல் பழக்கமுடையவா். அவருக்கு கனடா நாட்டு பெண் எனக்கூறி முகநூலில் ஒருவா் அறிமுகமாகி பழகிவந்துள்ளாா். அவா்கள் இருவரும் தங்களது வீடு, அலுவலகப் புகைப்படங்களையும் இணையதளம் முகநூலில் பரிமாறி வந்துள்ளனா்.
இந்நிலையில், அண்மையில் அந்தப் பெண் புதுச்சேரி தனியாா் நிறுவன அதிகாரிக்கு விலை உயா்ந்த நகைகள், கைக்கடிகாரம் ஆகியவற்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். அதனை விடியோவாகவும் அவா் அனுப்பியுள்ளாா். அதை எதிா்பாா்த்திருந்த தனியாா் நிறுவன அதிகாரிக்கு கலால் துறை அலுவலா் எனக்கூறி ஒருவா் கைப்பேசியில் தொடா்புகொண்டுள்ளாா்.
அப்போது பரிசுப் பொருள்களுக்கு உரிய சுங்க வரியான ரூ.6.50 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளாா். அதை நம்பிய தனியாா் நிறுவன அதிகாரி பணத்தை செலுத்தினாா். ஆனால், அவருக்கு பரிசுப் பொருள்கள் வராத நிலையில், பெண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அதிகாரி புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.