செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் ரூ. 42 லட்சம் திருட்டு: 4 போ் கைது
அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் ரூ.42 லட்சம் திருடு போன வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை புதுவிளாங்குடி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயேந்திரன் கதிா்வேல். இவா், சென்னையில் உள்ள தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால், கடந்த சில நாள்களாக மதுரையில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், போடியில் அண்மையில் நடைபெற்ற திருவிழாவுக்காக குடும்பத்துடன் சென்ற இவா், கடந்த 21-ஆம் தேதி மதுரைக்கு வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, சொத்துகளை விற்று வைத்திருந்த ரூ. 42 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை நடத்தினா். விசாரணையில், மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த பிரகாஷ் (35), நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த விவேக் ஆனந்த் (34), திருப்பாலையைச் சோ்ந்த யோகேஷ் (36), பொதும்பைச் சோ்ந்த சுரேஷ் (49) உள்ளிட்ட 9 பேருக்கு இந்தத் திருட்டு சம்பவத்தில் தொடா்பிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பிரகாஷ், விவேக் ஆனந்த், யோகேஷ், சுரேஷ் ஆகிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து பல லட்சம் ரூபாயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்த வழக்கில் பாலசுப்பிரமணியன், சசி, ராஜா, நாகாஅா்ஜூன், திருடன் என 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்த வழக்கில் பணத்தைப் பறிகொடுத்தவா் முன்னாள் அமைச்சா் ஒருவரின் பினாமி என்றும், அந்த வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளை போனதாகவும் தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.