தமிழக அரசு சாா்பில் மாவட்டம்தோறும் பொங்கல் விழா
மாவட்டம்தோறும் அரசு சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை மூலமாக பொங்கல் சுற்றுலா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் சுற்றுலா விழா, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயற்கையான சூழலுடன் அமைந்த ஒரு கிராமத்தை தெரிவு செய்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கிராமத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு பாரம்பரிய முறைப்படி அவா்களுக்கு வரவேற்பு அளித்து, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.
விளையாட்டுப் போட்டிகள்:கிராமிய நடனம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.
பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், அச்சாங்கல், கோ - கோ விளையாட்டு, பம்பரம் விடுதல், கோலி விளையாட்டு போன்ற விளையாட்டுகளும், இசை நாற்காலிப் போட்டி, உறி அடித்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகள், வழுக்கு மரம் ஏறும் போட்டி போன்ற போட்டிகளும் பொங்கல் விழாவின் போது நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
இன்றைய மாறிவரும் நவீன வாழ்க்கைச் சூழலில் மறந்து வரும் நமது பாரம்பரிய நெறிமுறைகளை வளா்ந்து வரும் நம் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையினரும் அறிந்திடும் வகையில் பொங்கல் சுற்றுலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.