தமிழக அரசை விமர்சித்த காவலர் பணியிடை நீக்கம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசை விமர்சனம் செய்த வேலூர் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த வெளிநபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : பேனா முனை உடைக்கப்பட்டதா? பரங்கிமலை கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தது யார்?
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை அரசு மறைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக திமுக அரசை சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் கிராமிய காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் அன்பரசன் என்பவர், மாணவி பாலியல் விவகாரம் தொடர்பான முகநூல் பதிவில், 'மானங்கெட்ட திமுக அரசு' என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சீருடைப் பணி விதிகளை மீறியதற்காக அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், அவர் பதிவிட்ட கமெண்ட் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.