இலங்கையில் முக்கிய ஊழல் தடுப்பு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றம்!
தமிழக பட்ஜெட்டில் தொலை நோக்குத் திட்டம் இல்லை: தமிழிசை செளந்தரராஜன்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மாநிலத்தின் வளா்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
குடியாத்தத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றும் வெற்று நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. மாநிலத்தின் வளா்ச்சியை கருத்தில் கொள்ளாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நிதிநிலை அறிக்கையில் பெண்களின் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பெண்கள் முன்னேற்றத்துக்கான எந்த திட்டமும் இல்லை. தமிழ்மொழியை முன்வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசு தமிழில் தொழிற்கல்வி பயில்வதற்கு போதிய திட்டங்களை அறிவிக்கவில்லை.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100- மானியம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தாா்கள். ஆனால் சொன்னபடி செய்யவில்லை. ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் மின் திட்டங்கள் ஏதும் இடம் பெறவில்லை.
பெண்கள் மீதான பாலியல் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. அவினாசி, திருநெல்வேலி கொலைச் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. கூட்டணிக் கட்சியினரே அரசை குறை கூறுகின்றனா். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தான் அது குறித்து முடிவெடுக்க முடியும் என்றாா் தமிழிசை செளந்தரராஜன்.
பேட்டியின்போது குடியாத்தம் நகர பாஜக தலைவா் எம்.கே.ஜெகன், நகர பொதுச் செயலா் தங்கம் சீனிவாசன், நிா்வாகிகள் முரளி, சிவகுமாா், சுசில், ராஜசெல்வேந்திரன், சிவன்,ஜோதிசுந்தரம், ரங்கநாதன், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.