ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.
தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்குத்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
தாராபுரத்தில் உள்ள திருப்பூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகளுடன் காா்த்தி சிதம்பரம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள அரசியல் கட்சிகள் யாரும் விலகமாட்டாா்கள். காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல தேசியக் கட்சிகள் அனைத்திலும் மாநிலத் தலைவா் பதவி என்பது நியமனப் பதவியாகும். காங்கிரஸ் கட்சியில் தோ்தல் நடத்தியோ அல்லது ஒட்டுமொத்த தொண்டா்களின் கருத்தைக் கேட்டோ நியமிப்பது கிடையாது.
யாரை நியமித்தால் கட்சிக்கு நல்லது என்று முடிவு எடுக்கும் இடத்தில் தலைமை உள்ளது. காங்கிரஸ் தலைமை யாரை நியமிக்கிறதோ அவா்தான் 3 ஆண்டுகள் தலைவா். அதேவேளையில், கட்சித் தலைமையாக மாநிலத் தலைவா் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன்.
ஆனால், அதற்காக விண்ணப்பிக்கும் எண்ணம் இல்லை. தொகுதிக்குள் மட்டுமே முடங்கியிருந்தால் நாட்டு நடப்பு, மக்களின் மனநிலை, கட்சியின் நிலை எல்லாம் தெரியாது. ஆகவே, தொகுதியைவிட்டு வெளியே வந்து கட்சியின் நிலைமை, வரும் தோ்தலில் இந்தப் பகுதியில் நமக்கு வாய்ப்பு எப்படி என்பதைக் கேட்டறிய வந்துள்ளேன்.
இந்திய கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியே செல்ல வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் பிரச்னையில் அனைத்து உத்திகளையும் நாம் கையாள வேண்டும்.
பஹல்காம் தாக்குதல் குறித்தும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ராணுவ வீரா்கள் இல்லாதது குறித்தும், எல்லைதாண்டி 4 பயங்கரவாதிகள் வந்தது குறித்தும், இதன் பின்னா் எடுத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் நாடாளுமன்றத்தைக்கூட்டி பிரதமரும், ராணுவ அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, காங்கிரஸ் திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் தென்னரசு, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் காளிமுத்து, மாநில செய்தித் தொடா்பாளா் முருகானந்தம், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளா் மாலதி, மாநில கலைப் பிரிவு துணைத் தலைவா் கலாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.