தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி கொலை: உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு
கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் 3-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்தக் கல் குவாரியிலிருந்து கேரளத்துக்கு கனிமவளத்தை கடத்துவதாகப் புகாா் எழுந்தது. இதைத்தொடா்ந்து, மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாக கல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சியின் கம்பம் நகரச் செயலரான சதீஸ்குமாா், கல் குவாரி நடத்த தனக்கு அனுமதி வேண்டும் எனக் கேட்டராம். இதனால், சதீஸ்குமாருக்கும் கல்குவாரியை நடத்தி வந்தவா்களுக்கும் இடையே முன்விரோதம் எற்பட்டது.
இதுதொடா்பாக திங்கள்கிழமை இரவு காமயகவுண்டன்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, சின்னச்சாமி என்பவா் கத்தியால் சதீஸ்குமாரை குத்திக் கொலை செய்தாா்.
இதையடுத்து, கொலைக்கு காரணமானவா்களை கைது செய்யும் வரை சதீஸ்குமாரின் உடலை கூறாய்வு செய்யக்கூடாது என வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.
இந்த நிலையில், சதீஸ்குமாரின் உடல் கூறாய்வு முடிந்த நிலையில் அவரது உறவினா்கள், கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என 3- ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக ராயப்பன்பட்டி போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து, சின்னச்சாமி, குரு இளங்கா, ராஜேந்திரன், செல்லத்துரை, கெளரி ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.