`தமிழ்நாடு ஒன்றும் கேரளக் கழிவுகளைக் கொட்டும் டம்ப் யார்டு இல்லை!' - கொதிக்கும் விஜய் வசந்த்
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த், நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே அதானி நிறுவனத்தின் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தியிருந்தோம். மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. அதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் அமைப்புச் சட்டத்தின் 75 வது ஆண்டு விழா குறித்து விவாதம் நடத்தி ஒருமனதாக பாராளுமன்றத்தை நடத்துவோம் என தீர்மானித்து இரண்டு நாட்கள் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது அம்பேத்கர் குறித்து கிண்டலாக பேசினார். அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும் என நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அம்பேத்கரை மட்டும் அல்ல அரசியலமைப்புக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை நாம் ஒரு குற்றச்சாட்டை வலியுறுத்தினால் அவர்கள் அதை திசைதிருப்பும் விதமாகத்தான் எல்லாமே செய்வார்கள். நாடாளுமன்றத்துக்கு வெளியே நாங்கள் போராட்டம் நடத்த வருவது தெரிந்தே, வேண்டும் என்றே பா.ஜ.க எம்.பி-க்கள் வழிவிடாமல் நின்றனர். அதில் கைகலப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி யாரையும் தள்ளிவிடவில்லை. ராகுலை தள்ளிவிட முயன்றபோதுதான் அவர் கீழே விழுந்தார். ஆனால், அதை இப்போது வேறுவிதமாக திசைதிருப்புகிறார்கள். மக்கள் திரையரங்குகளுக்கு போவதே குறைந்துவிட்டது. இந்த நிலையில் திரையரங்குகளில் விற்கப்படும் பாப்கானுக்கும் ஜி.எஸ்.டி கொண்டுவந்துவிட்டார்கள். எனவே ஜி.எஸ்.டி., யை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டமும் தமிழ்நாடும் கேரளா கழிவுகளை கொட்டும் டம்ப் யார்டு இல்லை. இது சம்பந்தமாக ஆட்சியரிடமும் பேசியுள்ளோம். முதல்வர் குமரி மாவட்டம் வரும்போதும் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். மணவாளக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய அரிய மணல் ஆலையை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடலோர மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்திய அரிய மணல் ஆலையை விரிவுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த ஆலையை விரிவுபடுத்த விட மாட்டோம். இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என பாராளுமன்றத்திலும் வலியுறுத்துவோம்" என்றார்.