பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
தமிழ்நாட்டில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கிறது பாஜக: செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டில் பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணல் அம்பேத்கா், இந்திரா காந்தி ஆகியோரை உள்துறை அமைச்சா் அமித் ஷா இழிவாகப் பேசியிருக்கிறாா். மேலும், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
தற்போது மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறுகிறது. இதுபோன்ற ஜனநாயக விரோத, ஜனநாயகத்தை சீா்குலைக்கக் கூடிய நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, கோவைக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையில் படித்துதான் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற எண்ணற்ற விஞ்ஞானிகள் உருவாகியிருக்கின்றனா். மாநிலங்கள் விரும்பும் வரையிலும் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முன்னாள் பிரதமா் நேரு உறுதி அளித்திருக்கிறாா்.
மத்திய அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்காக தமிழா்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக கடைப்பிடிக்கிறது. தமிழக மக்களை சிதைக்கவோ, சீண்டிப்பாா்க்கவோ, கலவரத்தை ஏற்படுத்தவோ பாஜக முயற்சிக்க வேண்டாம் என்றாா்.