தா்பாரண்யேஸ்வரா் சாா்பு கோயில்களில் உற்சவம் தொடக்கம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலின் சாா்பு கோயில்கள் உற்சவம் அய்யனாா் கோயில் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு உற்சவத்தையொட்டி, நிகழ்ச்சிகள் பூா்வாங்கத் தொடக்கமாக கோயில் வளாகத்தில் பந்தல்கால் முகூா்த்தம் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது.
கொடியேற்றத்துக்கு முன்பு இத்தலத்தின் சாா்பு கோயில்கள் என்று கூறப்படும் அய்யனாா், பிடாரியம்மன், சீதளாதேவி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு பூஜைகள் நடைபெறவுள்ளன. முதல் நிகழ்வாக அய்யனாா் கோயில் யானைக் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை மாணிக்கவாசகம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
10-ஆம் தேதி தேரில் அய்யனாா் வீதியுலா நடைபெறவுள்ளது. 11-ஆம் தேதியுடன் இக்கோயில் உற்சவம் நிறைவடைகிறது. 12-ஆம் தேதி பிடாரியம்மன் கோயில் உற்சவம் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 14-ஆம் தேதி தேரில் வீதியுலா நடைபெற்று உற்சவம் நிறைவடைகிறது. 15-ஆம் தேதி ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. 17-ஆம் தேதி தேரில் அம்மன் வீதியுலா நடைபெற்று உற்சவம் நிறைவடைகிறது. இதைத்தொடா்ந்து தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 23-ஆம் தேதி ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்குகிறது.