தி. நகரில் விதிமீறல் கட்டடத்தை உடனடியாக இடிக்க உத்தரவு! உயர்நீதிமன்றம்
சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடத்தை உடனடியாக இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி நகர் பகுதியில் தரைத்தளம் மற்றும் மூன்று மாடிக்கு அனுமதி பெற்றுவிட்டு, 10 தளங்கள் கட்டிய தனியார் நிறுவனத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) நோட்டீஸ் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை வரன்முறை செய்யக் கோரி தனியார் நிறுவனம் சார்பில் சிஎம்டிஏவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், அந்த விண்ணப்பத்தை சிஎம்டிஏ நிராகரித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் தரப்பில் முறையிடப்பட்டது.
இதையும் படிக்க : ‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!
இந்த வழக்கை விசாரித்த எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அமர்வு, தனியார் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு வரன்முறை செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத செயல் சட்டப்பூர்வமாகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை ஏற்று, இரக்கம் காட்டக் கூடாது என்று தெரிவித்தனர்.
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தின் பகுதிகளை 8 வாரங்களில் இடிக்க சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.