Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
திசையன்விளை தனியாா் தாதுமணல் நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கீரைக்காரன்தட்டில் தனியாருக்குச் சொந்தமான தாதுமணல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான தாதுமணல் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னா் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஐ.ஏ.எஸ்.அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான அதிகாரிகள், அந்த ஆலைகளில் சோதனை நடத்தினா். இதில், முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடா்ந்து, ஆலை உரிமையாளா்களுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி அபராதம் விதித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து ஆலை உரிமையாளா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
தாதுமணல் ஆலைகளில் முறைகேடு நடந்திருப்பதால், இதில் யாருக்கெல்லாம் தொடா்பு இருக்கிறது என்பதை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து திசையன்விளை அருகில் கீரைக்காரன்தட்டில் உள்ள தனியாா் தாதுமணல் நிறுவன தலைமை அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் 7 வாகனங்களில் சுமாா் 25-க்கும் மேற்பட்டோா் வந்தனா்.
இவா்கள் தனியாா் தாதுமணல் நிறுவன உரிமையாளா்கள் வைகுண்டராஜன், ஜெகதீசன், சுகுமாா் ஆகியோருக்குச் சொந்தமான ஆலைகளிலும், அவா்களது வீடுகளிலும் சோதனை நடத்தினா். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.