Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா? நயினாா் நாகேந்திரன் மறுப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வெளியேற தான் காரணமாக இருந்ததில்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சந்திர கிரகணம்போல் ஆட்சி மாற்றம் நிகழும். 2001இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சியில் தினகரன் மிக முக்கிய பங்கு வகித்தாா். என்னைப் போன்றவா்கள உயா் நிலைக்கு வர காரணமாக இருந்தவா். எனக்கு அவருடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
மக்களவைத் தோ்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த தினகரன் இப்போது கூட்டணியில் இல்லை; அதற்கு நான்தான் காரணம் எனக் கூறியிருக்கிறாா். எந்த அடிப்படையில் அவா் இதைக் கூறினாா் எனத் தெரியவில்லை.
அமித் ஷா வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறோம். அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகே எடப்பாடி கே.பழனிசாமி முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.
திருநெல்வேலி பூத் கமிட்டி மாநாட்டில்கூட அமித்ஷாவை வைத்துக்கொண்டுதான் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று கட்சியின் முன்னாள் தலைவா் அண்ணாமலை பேசினாா்.
அதிமுகவிற்கு 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கி இருக்கிறது. எனினும், கூட்டணியில் சிறிய கட்சி பெரிய கட்சி என்பது முக்கியமல்ல; ஒற்றுமைதான் தேவை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுவதும், தற்போது நடைபெறும் நிகழ்வுகளும் எனக்கு வருத்தமளிக்கின்றன.
அதிமுகவில் பிரிந்த தலைவா்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். அதேவேளையில், செங்கோட்டையன் பிரச்னை உள்கட்சி விவகாரம். அதில் பாஜக தலையிடாது; அவரை கட்சியில் சோ்த்துக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபடாது.
முதல்வரின் கொளத்தூா் தொகுதியில் 9,000 வாக்குகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை சில நாள்களில் வெளியிடுவேன். சுதந்திரத்திற்காக பாடுபட்ட முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக பாஜக வலியுறுத்தும் என்றாா் அவா்.