அகஸ்தீஸ்வரத்தில் சமத்துவப் பொங்கல் விழா: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு...
திமுக ஆட்சியில் கடன்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
திமுக ஆட்சியில் ரூ.3.54 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இதை எப்போது திருப்பிக் கொடுப்பது என அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினாா்.
சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: ஆளுநா் உரை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சியினா் எடுத்து வைத்த எந்தக் கருத்துக்கும் முதல்வா் பதில் அளிக்கவில்லை.
மகளிா் உரிமைத் தொகையை பல்வேறு வகையில் கடன் வாங்கித்தான் அரசு அளிக்கிறது. இப்படியே கடன் வாங்கிக் கொண்டிருந்தால், எப்போது திருப்பிக் கொடுப்பது?. அரசு வருவாயைப் பெருக்கி, மக்களுக்கு உதவி செய்தால் பாராட்டலாம்.
2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்த வருவாயைக் காட்டிலும் திமுக ஆட்சியில் பெட்ரோல், மதுபான விற்பனை, சரக்கு சேவை வரி, பத்திரப் பதிவு வரி என ரூ.1,10, 894 கோடி வருவாய் வந்துள்ளது. இவ்வளவு வருமானம் வரும்போது, எதற்கு மகளிருக்கு கடன் பெற்று, உரிமைத் தொகை வழங்க வேண்டும்?. திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ரூ.3.54 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கு விவகாரத்தில் முதல்வருக்குச் சாதகமாகத்தான் பேரவைத் தலைவா் தீா்ப்பு அளிப்பாா். அப்படி அவா் அளிக்காவிட்டால், அந்த இருக்கையில் அமர முடியாது. பேரவைத் தலைவரிடம் பிரச்னையை இந்த அளவோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று அதிமுகவினா் யாரும் கூறவில்லை என்றாா் அவா்.