திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் தரப்பினருக்கும், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல பேராயா் பா்னபாஸ் தரப்பினருக்கும் இடையே கோஷ்டி பூசல் நிலவி வந்தது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பேராயா் பா்னபாஸ் தரப்பைச் சோ்ந்த காட்பிரே நோபிள் என்பவா் மீது ஞானதிரவியத்தின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து ஞானதிரவியம் உள்ளிட்ட 33 போ் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஞானதிரவியம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரி, காட்பிரே நோபிள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்காகவே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கு விசாரணை செப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பதைப் பாா்க்க வேண்டும். எனவே, ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி சமா்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.