திமுக முன்னாள் எம்பிக்கு எதிரான வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கில் 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் பர்னபாஸ் தரப்பினருக்கும், திமுக முன்னாள் எம்.பி ஞானதிரவியம் தரப்பினருக்கும் இடையே கோஷ்டிபூசல் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு பேராயர் பர்னபாஸ் தரப்பைச் சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபிள் என்பவர் மீது, ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஞானதிரவியம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெல்லை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி காட்பிரே நோபிள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், கடந்த நவம்பர் மாதமே ஞானதிரவியம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது, நீதிமன்ற ஆவணங்களின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்? ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர், எம்பி - எம்எல்ஏக்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
சத்தீஸ்கரில் கிராம மக்கள் இருவரைக் கொன்ற நக்சல்கள் !
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும், எம்பி - எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் சம்மன் வழங்க முடியாது என காவல்துறை கூறிவிட்டால் , சம்மன் அனுப்புவதற்காக தனிப் பிரிவை உருவாக்க நேரிடும். இல்லாவிட்டால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர், முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.