திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.
அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். அந்த கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இன்று இணைந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார்.
அதிமுகவில் இணைவதற்கு முன்னதாக, 1995 முதல் 1997 வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் மைத்ரேயன் இருந்துள்ளார்.