மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி ஓ.பன்னீா்செல்வம்
சென்னை: திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் தன்னைப் பற்றி வதந்தி பரப்பப்படுவதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று அவரது உடல்நலத்தை விசாரித்தேன். அவரது மூத்த சகோதரா் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை.
ஆனால், தற்போதைய சந்திப்பை வைத்து என்னை திமுகவின் ‘பி- டீம்’ என்றும், நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும், அந்தக் கட்சியில் இணையப்போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனா். இதில் உண்மை இல்லை.
முதல்வா் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல். நான் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். வரும் 2026-இல் தமிழக சட்டப்போவைத் தோ்தலில் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம்.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே 29.8.2024-இல் அறிக்கை வெளியிட்டேன். இதேபோல, பெரியாா், அண்ணா பற்றி விமா்சித்த இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25.6.2025-இல் அறிக்கை வெளியிட்டேன்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை, கே.அண்ணாமலை விமா்சித்தபோது, அதற்கு கண்டனம் தெரிவித்து 12.6.2023-இல் அறிக்கை வெளியிட்டேன்.
நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, நலன் என்று வந்துவிட்டால் ஜெயலலிதா வழியில் செயல்படக் கூடியவன் எனத் தெரிவித்துள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.