Noise Bombing: `ஒலி' தாக்குதல்... புது முறையில் தென் கொரியாவை அச்சுறுத்தும் வட க...
"தியேட்டர் வாசலில் மக்களிடம் ரிவ்யூ கேட்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியுங்கள்"- சீனு ராமசாமி
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியான 'கங்குவா' திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே விமர்சனங்களை சந்தித்தது.
இது சம்மந்தமாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “தியேட்டர்களுக்குள் யூடியூப் ரிவ்யூவர்களை நாமே அனுமதிப்பது நமது தொழிலை நாமே கெடுத்துக் கொள்வது போலதான். அவர்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்காதீர்கள். இரண்டு வாரங்களுக்கு எந்தப் படத்தின் விமர்சனங்களும் வரக்கூடாது” என சட்டம் கொண்டு வாருங்கள் எனப் பேசினார். அதையடுத்து நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் யூடியூப் சேனல்களைத் திரையரங்குகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் சமீபத்திய பட நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் சீனு ராமசாமி திரைப்பட விமர்சனம் குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், " விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விமர்சனத்தை யாரும் தடுக்க முடியாது. ஒரு படைப்புக்கு விமர்சனம் கண்டிப்பாக தேவை. அதை கட்டுப்படுத்த நினைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். அப்படி நினைக்கவும் கூடாது. விமர்சனம்தான் நமது அடுத்த படைப்புக்கு ஊக்கம். அதுதான் உரம்.
ஆனால் நம்ம திரையுலகம் எதைப் பார்த்து அச்சப்படுகிறது என்றால் விமர்சனம் என்கிற பெயரில் வருகிற அவதூறைத்தான். இன்றைக்கு இருக்கும் இணையதள வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டியது இருக்கிறது. திரையரங்கு வாசலில் மக்களிடம் ரிவ்யூ கேட்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும்.
விமர்சனம் இல்லை என்றால் சிறிய படங்கள் கவனம் பெறாமல் போய்விடும். படம் பார்த்தபின் விமர்சனங்களைப் படிப்பது என் வழக்கம். இப்படத்தை நாம் பார்க்காத கோணத்தில் விமர்சகர் பார்த்துள்ளார் என ஆச்சரியப்படுவேன். ஒவ்வொரு விமர்சகர்களும் சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் படத்தை விமர்சனம் செய்ய வேண்டும். விமர்சனம் மட்டும்தான் ஒரு கலையை செழிக்க வைக்க முடியும்” என்று பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...