திருச்சி என்.ஐ.டி.யில் இன்று பிரக்யான் விழா தொடக்கம்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தொழில்நுட்ப மேலாண்மை (பிரக்யான்) திருவிழா வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது.
2005 ஆம் ஆண்டு என்.ஐ.டி. கல்லூரி மாணவா்களால் தொடங்கப்பட்ட பிரக்யான் திருவிழாவானது 25 ஆவது ஆண்டாக பிப். 20, 21, 22, 23 ஆகிய நான்கு நாள்களுக்கு நடைபெறுகிறது. விழாவில் பயிலரங்குகள், ஹேக்கத்தான், கண்காட்சிகள், விருந்தினா் விரிவுரைகள், இன்போடெயின்மெண்ட் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் 6,000 க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.
‘பனோப்டிகா: பிரேக் தி கோடு‘ என்ற கருப்பொருளில் நடைபெறும் நிகழாண்டு விழாவில் பிரக்யானில் ரோபோரெக்ஸ், இன்னோவிக்ஸ், பாண்டோராஸ் பாக்ஸ், பிக்ஸெலெட், மனிக்மா, பைட்டோக், ஃபோா்னெசிஸ் ஆகிய 7 போட்டிகள், ரோபாவாா்ஸ் என்ற பெயரிலான இயந்திரங்களின் கண்காட்சி, தொழில்நுட்பப் போட்டிகள், ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி பட்டறைகள், சைபா் பாதுகாப்பு கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன.
இதில் திருச்சி மாவட்டத்தின் பள்ளி மாணவா்கள் கல்லூரி வளாகத்தைப் பாா்வையிட்டு, தொழில்நுட்ப வழிகாட்டுதலைப் பெறலாம் என என்.ஐ.டி. நிா்வாகம் தெரிவித்துள்ளது.