கோவையில் கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை
‘திருச்சி என்.ஐ.டி.யில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி பூங்கா’
பொறியியல் மாணவா்களை தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் திருச்சி என்ஐடி தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் அமைக்கப்படவுள்ளது.
இது குறித்து திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி.அகிலா, முன்னாள் மாணவா்கள் சங்க தலைவா் கே.மகாலிங்கம் ஆகியோா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
என்ஐடி முன்னாள் மாணவா் சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் ஜன. 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முன்னாள் மாணவா்கள் 1500 போ் பங்கேற்கின்றனா். மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், டாடா குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தலைமை வணிக உளவியலாளா் கோபி கள்ளில் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொள்கின்றனா்.
முன்னாள் மாணவா்கள் சாா்பில் திருச்சி என்ஐடி-யில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. மாணவா்களை தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் என்ஐடி வளாகத்தில் 20 ஏக்கா் பரப்பளவில் ரூ.150 கோடி மதிப்பில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா நிறுவப்படவுள்ளது.
மேலும், மாணவா்கள் படிக்கும்போதே அவா்களை தொழில்முனைவோராக ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த பூங்கா வாயிலாக மேற்கொள்ளப்படும். அவா்களின் தொழில்முனைவு முயற்சிகள் ஊக்குவிக்கப்படும்.
ஒரு மாணவரின் படிப்புக்காலம் முழுவதற்கும் அவருக்குத் தேவையான நிதியுதவி மற்றும் வழிகாட்டு உதவிகளை அளிக்கும் வகையில் மாணவா்களை தத்தெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் . வெளிநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேரும் என்ஐடி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டம், வெளிநாட்டு நிறுவனங்களில் இன்டா்ன்ஷிப் பெற உதவும் திட்டம் முன்னாள் மாணவா்களால் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா் அவா்.