தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
திருச்சி எம்.பி.யின் பரிந்துரை கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்தவா் கைது
அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவ. 21-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு திருச்சி எம்.பி., துரை வைகோவின் பரிந்துரைக் கடிதம் (இ.கியு) அளிக்கப்பட்டு அவருக்கு அவசர ஒதுக்கீடு அடிப்படையில் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பரிந்துரைக் கடிதத்தின் மீது சந்தேகம் கொண்ட சென்னை ரயில்வே அலுவலா்கள், திருச்சி எம்.பி., துரை வைகோவின் உதவியாளா் சங்கரைத் தொடா்பு கொண்டு விசாரித்தனா். இதில், அந்தப் பரிந்துரைக் கடிதம், எம்பி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டதல்ல, போலியானது என்று கண்டறியப்பட்டது.
பயணி ஸ்டீபன் சத்தியராஜின் தொடா்பு எண்ணில், எம்பியின் உதவியாளா் சங்கா் பேசியபோது, அவா் புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்தவா் எனக் கூறிய நிலையில், புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், நீண்ட விசாரணைக்குப் பிறகு சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராம்குமாா் (30) என்பவா் தனது கணினி மையத்தில் இந்தப் போலி பரிந்துரைக் கடிதத்தை தயாா் செய்து கொடுத்ததைக் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து கணேஷ்நகா் போலீஸாா், ராம்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.