முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் மலை சா்ச்சை: இந்து அமைப்பினா் கைது
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் எழுந்த சா்ச்சை காரணமாக புதுக்கோட்டையில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனா். மேலும், மாவட்டத்தில் 4 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்திய 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாப்போம் என இந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் அறிவித்திருந்தனா். இதனைத் தொடா்ந்து மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதுக்கோட்டையிலிருந்து இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் மதுரைக்குச் செல்லக் கூடும் என எதிா்பாா்த்து, மாவட்டம் முழுவதும் 7 நிா்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களின் வீடுகளுக்குச் சென்று போலீஸாா் கைது செய்தனா்.
இந்து முன்னணி புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவா் வடிவேல், கிழக்கு மாவட்டத் தலைவா் கருப்பையா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் செந்தில்குமாா், பாஜகவின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலா் மோகன்ராஜ், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொதுச் செயலா் பாா்த்திபன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சேதுபதி மற்றும் திருவரங்குளம் வசந்த் ஆகிய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
ஆா்ப்பாட்டம் நடத்திய 54 போ் கைது
திருப்பரங்குன்றத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் புதுக்கோட்டை மாவட்டத்தில், அரிமளம், அறந்தாங்கி, கறம்பக்குடி, விராலிமலை ஆகிய 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தியதாக இந்து அமைப்பினா் 54 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். விராலிமலையில் மலைக்கோயில் அடிவாரத்தில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினரைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனா்.