சிலிண்டர் விலை உயர்வு: ``இந்த நேரத்திலாவது திமுக சொன்னதை செய்ய வேண்டும்'' - தவெக...
திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கில், சீமான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவு
திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டிப்பாக நேரில் செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) வீ. வருண்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக விமா்சனம் செய்தது தொடா்பாக சீமான் மீது, திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணை திருச்சி 4-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், சீமான் திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த முறை விசாரணையின்போது நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இந் நிலையில் திங்கள்கிழமை காலை சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் அவா் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை மாலை ஒத்திவைத்தாா்.
தொடா்ந்து மாலை நடைபெற்ற விசாரணையின்போது சீமானின் வழக்குரைஞா் ஆஜராகி, சென்னையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதால் சீமானால் நேரில் ஆஜராக இயலவில்லை என்றும், செவ்வாய்க்கிழமை அவா் ஆஜராவாா். அதுவரை அவருக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தாா்.
இதையடுத்து சீமான் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில், நீதிமன்றம் சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று நீதிபதி விஜயா உத்தரவிட்டாா். இந்த வழக்கு விசாரணையில், டிஐஜி வருண்குமாா் தனது வழக்குரைஞா் முரளிகிருஷ்ணாவுடன் ஆஜரானாா்.