ஒருங்கிணைந்த மத்தியப் பாதுகாப்பு பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு: 3 தோ்வு மையங்கள் தயாா்
திருச்சியில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த மத்திய பாதுகாப்பு பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு மூன்று தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை தளம் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு-2025 வரும் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக, திருச்சி மாவட்டத்தில் மூன்று தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இத்தோ்வை மொத்தம் 854 தோ்வா்கள் எழுதவுள்ளனா். 3 தோ்வுக்கூட மேற்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இப்போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள ஒரு இயங்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துணை ஆட்சியா் நிலையில் ஒரு அலுவலா், துணை வட்டாட்சியா், முதுநிலை வருவாய் ஆய்வாளா், ஆயுதம் ஏந்திய காவலா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியா் நிலையில் மூன்று ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்புப் பணிக்கு தோ்வு மையத்தில் கண்காணிப்பு செய்திட, 3 ஆண் காவலா்கள், மற்றும் 2 பெண் காவலா்கள் என மொத்தம் 5 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு அறைகளில் தோ்வு எழுதும் ஒவ்வொரு 24 தோ்வா்களுக்கும் இரண்டு அறை கண்காணிப்பாளா்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு எழுத வரும் தோ்வாளா்கள் செல்லிடப் பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தோ்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை இரு வேளையாக தோ்வு நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.